This Article is From May 23, 2019

2021 வரை தமிழகத்தில் எடப்பாடியின் கொடி பறக்குமா?

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 345 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

2021 வரை தமிழகத்தில் எடப்பாடியின் கொடி பறக்குமா?

இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலைக்கப்பட்டு, தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 345 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் பி.ஜே.பி மட்டும் தனித்தே 300 இடங்களைப் பெறும் சூழ்நிலை உள்ளது. அதனால், மத்தியில் பி.ஜே.பி-யே ஆட்சி அமைக்கும். அதனால், அதன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அரசின் தலையில் தொங்கிய கத்தி நீங்கி உள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க-வின் பலம் 113. சபாநாயகர் சேர்த்தால் 114. அதில் மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி தினகரனை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். அவர்களைக் கழித்துவிட்டால், 110 பேர். மேலும், இதில் இரட்டை இலையில் வெற்றி பெற்ற தமிமூன் அன்சாரி, தி.மு.க-வை ஆதரிக்கிறார். அவரையும் கழித்துவிட்டால்கூட அ.தி.மு.க வசம் 109 எம்.எல்.ஏ-க்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெறும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 11 இடங்களில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. மேலும், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்த குமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி- பதவிக்கும் போட்டியிட்டு, தற்போதுவரை அவர் முன்னிலையில் உள்ளார்.

அதனால், அவர் வெற்றி பெற்றுவிட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார். அப்படியானால், தமிழக சட்டமன்றத்தின் இடங்கள் 233 ஆகும். அதில் 116 இடங்களைப் பெற்றாலே, அ.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. தற்போது அவர்கள் வசம், 109 இடங்கள் உள்ளன. மேலும் நடக்கும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 11 இடங்களில் முன்னணியில் உள்ளனர். முன்னணியில் உள்ள அந்த 11 இடங்களில் வெறும் 7  இடங்களில் வெற்றி பெற்றாலே, அ.தி.மு.க ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால், 2021 வரை தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.

.