This Article is From Aug 19, 2019

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் ஜூலையிலிருந்து, 16 சென்டீ மீட்டர் மழை பொழிந்துள்ளது- வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்!

"மீனவர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லை"

Chennai:

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. வறட்சியால் தவித்துக் கொண்டிருந்த சென்னை மக்களுக்கு நேற்றைய மழை பெரும் நிம்மதியைத் தந்தது. 

“இந்த மழை எங்களுக்கு மனநிறைவைத் தந்துள்ளது. மிகவும் குறைவாகத்தான் மழை பெய்கிறது என்றாலும், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் அது பயன் தரும்” என்று சென்னைவாசியான சுரேஷ் பாலாஜி கூறுகிறார்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். தமிழகம் மற்றும் புதுவையில் ஜூலையிலிருந்து, 16 சென்டீ மீட்டர் மழை பொழிந்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு நிலை 18 சென்டீ மீட்டர் ஆகும். மீனவர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லை” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

நேற்றைய மழை பொழிவு குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், “தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னை நகரில் பரவலான மழை பெய்து வருகிறது. மிகவும் அரிதான நிகழ்வு இது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும். இதனால் தொடர்ந்து மழை பெய்யும். 

வட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வரும் இந்நேரத்தில் மேற்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கிறது. நேற்று தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்தது. 

சென்னையைப் பொறுத்தவரை 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான், பகலில் இவ்வளவு மழை பெய்துள்ளது. இந்த மழை பொழிவு தொடரும்” என்று கூறியுள்ளார்.
 

.