This Article is From Jul 29, 2020

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது.

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஹைலைட்ஸ்

  • 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
  • சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான  மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு, தலைஞாயிறு (நாகப்பட்டினம்) திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த இரு தினங்களுக்கு குமரிக்கடல், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கும் அடுத்த 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடாப் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும், கடந்த ஆறு வருடங்களில் தமிழகத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு 47 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.