This Article is From Aug 18, 2019

வண்ணக்கயிறு விவகாரம்: நிலைப்பாட்டில் ‘யு-டர்ன்’ அடித்த தமிழக அமைச்சர்!

தமிழக எதிர்க்கட்சியான திமுக-வும், அதிமுக அரசின் இந்த மாற்று நிலைபாட்டைக் கடுமையாக சாடி வருகிறது.

வண்ணக்கயிறு விவகாரம்: நிலைப்பாட்டில் ‘யு-டர்ன்’ அடித்த தமிழக அமைச்சர்!

‘பாஜக-வின் நெருக்கடிகளுக்கு அதிமுக அரசு வளைந்து கொடுக்கிறது’ என்று திமுக செங்கோட்டையனின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளது. 

Chennai:

தமிழகத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள், தங்கள் சாதியை முன்னிறுத்தும் வகையில் கையில் வண்ணக் கயிறு அணியக் கூடாது என்று தமிழக கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த சுற்றறிக்கை குறித்து தற்போது பேசியுள்ள பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில், மாணவர்களை சாதிய அடையாளத்தை வெளிப்படுத்த வண்ணக் கயிறு போட்டுவந்தால், புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் நடவடிக்கைகளில் எந்தவித மாற்று நடவடிக்கையும் இருக்காது” என்று கூறியுள்ளார். தமிழக கல்வி இயக்குநரகம், அனுப்பிய சுற்றறிக்கையின் உத்தரவு செல்லுமா என்பது குறித்து அமைச்சர் தெளிவான பதிலை அளிக்கவில்லை. 

அவர் இந்த விவகாரம் குறித்து மேலும் பேசுகையில், “பள்ளியில் மாணவர்கள் அனைவரும் சமம்தான். அவர்களுக்குள் எந்தவித வேறுபாடுகளும் கிடையாது. சாதியத்தை முன்னிறுத்தும் வகையில் எங்காவது வண்ணக் கயிறுகள் கட்டப்படுகின்றனவா என்பதை ஆராய்வோம். அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சூசகமாக கூறியுள்ளார். 

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் கையில் கயிறுகள் கட்டுவதோ, திலகமிடுவதோ கூடாது. இது குறித்து பள்ளியின் முதல்வர்கள் மற்றும் மாவட்ட கல்வித் துறை நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினார். 

இந்த சுற்றறிக்கை தனது கவனத்துக்குக் கொண்டு வராமல் அனுப்பப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். முன்னதாக இந்த சுற்றறிக்கைக்கு, மாநில பாஜக தலைவர்கள் ‘இந்துக்களுக்கு எதிரானது' என்று கூறி கண்டனம் தெரிவித்தனர். 

பாஜக-வின் எச்.ராஜா இது குறித்து, ‘கையில் கயிறு கட்டுவது நெற்றியில் திலகமிடுவது இந்து மத நம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்று மத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித் துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்' என்று கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையனின் கருத்து, கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் துறையில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர், “கல்வித் துறை இயக்குநருக்கு ஆதரவாக அமைச்சர் செயல்படவில்லை. பள்ளிகளில் சாதியவாதம் புகக் கூடாது” என்கிறார்.

தமிழக எதிர்க்கட்சியான திமுக-வும், அதிமுக அரசின் இந்த மாற்று நிலைபாட்டைக் கடுமையாக சாடி வருகிறது. ‘பாஜக-வின் நெருக்கடிகளுக்கு அதிமுக அரசு வளைந்து கொடுக்கிறது' என்று திமுக செங்கோட்டையனின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளது. 

தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் இருக்கும் திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில், மாணவர்கள் தங்களது சாதிகளை அடையாளப்படுத்துவது போன்ற வண்ணக் கயிறுகளைக் கட்டுவது அதிகமாக இருக்கிறது. ஆதிக்கத் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சிவப்புக் கயிறுகளைக் கட்டுவதும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீலக் கயிறு கட்டுவதும் வழக்கமாக இருக்கிறது. இந்த பகுதிகளில் தொடர்ந்து சாதிச் சண்டைகள் நடந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை ஆட்சியர், மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டுவதற்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

PTI தகவல்களுடன்

.