This Article is From Aug 02, 2019

கடன் பிரச்னை: மனமுடைந்த விவசாயி வங்கி முன்னர் தற்கொலை- கோவையில் சோகம்!

இந்த விவகாரம் குறித்து வங்கி அதிகாரிகள் எந்த வித கருத்தையும் சொல்லவில்லை. போலீஸ் தரப்பும் வேறு தகவல்களை சொல்லவில்லை.

கடன் பிரச்னை: மனமுடைந்த விவசாயி வங்கி முன்னர் தற்கொலை- கோவையில் சோகம்!

பூபதி தரப்பு எவ்வளவு கடன் வாங்கியது என்ற தகவல் கூட தெரிவிக்கப்படவில்லை. 

Coimbatore:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், தனது சொத்துகளை அடமானம் வைத்து, கோயம்புத்தூரில் இருக்கும் ஓர் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த சொத்துகளை அவருக்குத் தர வேண்டுமென்றால், வாங்கிய கடன் மொத்தமும் அடைத்தால் மட்டுமே முடியும் என்று வங்கி தரப்பு கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த விவசாயி, வங்கி முன்னர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது. 

சேலம் மாவட்டத்தின் கொங்கனாபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி. கோவையில் தன் சொத்துகளை மீட்கச் சென்ற அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால், வங்கிக்கு வெளியே வந்து விஷம் அருந்தியுள்ளார். சிறிது நேரத்திலேயே வங்கி வாசலிலே மயக்கமடைந்து விழுந்த பூபதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பூபதி, மூவருடன் இணைந்து, பால் பண்ணை ஆரம்பிப்பதற்கு குழுக் கடனை வாங்கியுள்ளதாக தெரிகிறது. பூபதி நினைத்த மாதிரி வியாபாரம் இருக்கவில்லை. தொடர் நஷ்டம் ஏற்படவே, கடனை நான்காக பிரித்து, தனது பங்கை மட்டும் செலுத்த முன் வந்துள்ளார் பூபதி. அப்படி செலுத்தும் பட்சத்தில் அடமானம் வைத்த சொத்து, மீண்டும் தரப்படும் என்று அவர் நம்பியுள்ளார். 

நேற்று அவர் வங்கிக்கு சென்று, வங்கி அதிகாரிகளுடன் இது குறித்து பேசியுள்ளார். ஆனால் வங்கி தரப்பில், முழுக் கடனும் கொடுத்தால் மட்டுமே சொத்து குறித்தான ஆவணங்களைத் திரும்ப தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என்று போலீஸ் கூறுகிறது. 

இதைத் தொடர்ந்துதான் வங்கியிலிருந்து வெளியே வந்த பூபதி, விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். 

இந்த விவகாரம் குறித்து வங்கி அதிகாரிகள் எந்த வித கருத்தையும் சொல்லவில்லை. போலீஸ் தரப்பும் வேறு தகவல்களை சொல்லவில்லை. பூபதி தரப்பு எவ்வளவு கடன் வாங்கியது என்ற தகவல் கூட தெரிவிக்கப்படவில்லை. 
 

.