This Article is From May 31, 2020

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றிற்கெல்லாம் அனுமதி? முழு விவரம்!!

பொது போக்குவரத்தினை பொறுத்த அளவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்வதாகவும் அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றிற்கெல்லாம் அனுமதி? முழு விவரம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 21 ஆயிரத்தினை கடந்த நிலையில் இன்றுடன் மாநில அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவானது முடிவடைகின்றது. இந்நிலையில் ஊரடங்கு ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழ அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கில் மாநில அரசு வழங்கியுள்ள தளர்வுகள்:
 

போக்குவரத்தில் தளர்வுகள்;

  • இக்காலகட்டங்களில் பிற மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை நீட்டிக்கப்படுகிறது. மாநிலத்திற்குள் பிற மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு இ-பாஸ்  தேவையில்லை என அரசு குறிப்பிட்டுள்ளது. அதே போல வழிப்பாட்டு தளங்களுக்கான தடையும், இதர மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
  • பொது போக்குவரத்தினை பொறுத்த அளவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்வதாகவும் அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்களில், தனியார் பேருந்துகளும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் 60 சதவிகித பயணிகளோடு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அதேபோல மண்டலங்களுக்கு இடையே சென்று வர இ-பாஸ் முறை நடைமுறையில் இருக்கும். அதேவேளையில் மண்டலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. 
  • சென்னையில் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர பிற பகுதிகளில் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் 3 பயணிகளுடன் இ - பாஸ் இல்லாமல் மண்டலத்திற்கு உள்ளேயே இயக்கலாம். அதேபோல ஆட்டோக்களில் 2 பயணிகளை ஏற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில், மின்சார ரயில், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கும் தடை நீட்டிப்பு.
     

பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை:

தமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிவிப்பின் படி,  மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1  முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன.

மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6:  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல்
எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க 
அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு
இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை  என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.

இ-பாஸ் முறை :

  • அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.
  • வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
     

இதர தளர்வுகள்:

  • வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படுகின்றது.குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் இவைகள் இயங்கலாம். ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும். 

  • சென்னை காவல் எல்லை கட்டுப்பாடு பகுதி தவிர்த்து பிற பகுதிகளில், டீக்கடை, ஹோட்டல் காலை 6 மணி - இரவு 9 வரை இயங்கும். ஹோட்டலில் வரும் 8ம் தேதி முதல் ஏசி இல்லாமல் 50 % இருக்கையில் மட்டும் அமர்ந்து உண்ண அனுமதி. டீ கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 % இருக்கையில் அமர்ந்து உண்ண அனுமதி.

  • நீலகிரி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களுக்கான தடை நீட்டிக்கப்படுகின்றது.தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் மருத்துவம், காவல், அரசு அலுவலர்கள், வெளிமாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் இயங்கலாம். 
  • சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களில் உள்ள 100% ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம். ஊழியர்கள் இயன்றவரை வீட்டிலிருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற பகுதிகளில் வரும் ஜூன் 1 முதல் முடி திருத்தும் நிலையம், அழகு நிலையங்கள் ஏசி இல்லாமல் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல்குளம், மது பார்கள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியம் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீட்டிப்பு.
  • அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை.
  • திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலத்தில் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது. 
  • பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவை மறு உத்தரவு வரும்வரை இயங்க தடை. எனினும் இந்நிறுவனங்கள் இணைய வழி கல்வி கற்றல் மூலம் பாடம் நடத்தலாம்.
     

மத்திய அரசு ஜூன் 30 வரை முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை நீட்டிப்பதாக நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.