This Article is From Sep 04, 2020

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில்  இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

கடலூரில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 

'கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (4.9.2020) ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதி,பெருமாள் என்பவரின் மனைவி திருமதி மலர்கொடி, நம்பியார் என்பவரின் மனைவி லதா, மாதவன் என்பவரின் மனைவி ராசாத்தி, உத்திராபதி என்பவரின் மனைவி சித்ரா, ராஜேந்திரன் என்பவரின் மனைவி ருக்மணி மற்றும் ரங்கநாதன் என்பவரின் மனைவி ரத்தினம்மாள் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில் துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்'.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

.