This Article is From Feb 06, 2019

'சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மாற்ற வேண்டாம்!': கேரள அரசு வாதம்- 10 ஃபேக்ட்ஸ்

செப்டம்பர் தீர்ப்புக்குப் பிறகு பல பெண்கள், சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

'சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மாற்ற வேண்டாம்!': கேரள அரசு வாதம்- 10 ஃபேக்ட்ஸ்

சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் 5-ல் 4 நீதிபதிகள், அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் போகலாம் என்று கூறினர்.

New Delhi:

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என்று சென்ற ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக சுமார் 40 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மேல்முறையீடு விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மேல்முறையீடு மனுவை விசாரித்து வருகிறது. 

10 ஃபேக்ட்ஸ்:

1.சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் 5-ல் 4 நீதிபதிகள், அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் போகலாம் என்று கூறினர். அவர்கள், ‘இள வயதுப் பெண்கள் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யக் கூடாது என்று சொல்வதை மதத்தின் கோட்பாடாக பார்க்க முடியாது' என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின்போது வாதாடிய கேரள அரசு தரப்பு, ‘செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் எந்த மாற்றவும் செய்யத் தேவையில்லை' என்றது. 

2.இதையடுத்து மனுதாரர் தரப்பில், ‘ஐயப்ப சாமி ஒரு பிரம்மச்சாரி. அதனால்தான் இள வயதுப் பெண்கள் வரக் கூடாது என்று சொல்லப்படுகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், அங்கு இருக்கும் நடைமுறை கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது. இந்த நடைமுறையால் தீண்டாமை கடைபிடிக்கப்படவில்லை' என்று வாதாடப்பட்டது. 

3.இதற்கு கேரள அரசு தரப்பு, ‘இள வயதுப் பெண்களை, கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடு கிடையாது. எனவே, தீர்ப்பை மாற்றி சொல்லக் கூடாது' என்றது.

4.இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது எனது கடமை' என்றார். ஆனால் கேரள அரசின் நிலைப்பாட்டை, அம்மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். 

5.அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, 42 வயதாகும் கனக துர்கா மற்றும் 44 வயதாகும் பிந்து அம்மினி ஆகியோர் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு இன்று வரை வலதுசாரி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருவரில் கனக துர்காவை, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

6.இரு பெண்களும் தங்களுக்குப் பாதுகாப்புத் தரக் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அதையடுத்து, அவர்களுக்குக் கேரள போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். 

7.சென்ற மாதம் தீர்ப்புக்குப் பின்னர் சபரிமலை கோயிலுக்குள் சென்ற இள வயதுப் பெண்களின் எண்ணிக்கையை கேரள அரசு சொல்லும்போது, ‘இதுவரை 51 இள வயதுப் பெண்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர்' என்றது. ஆனால், இந்த எண்ணிக்கையை வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. 

8.கேரள அரசு கொடுத்த பட்டியலில், சில பெண்களின் வயது 50-ஐத் தாண்டி இருந்தது. அதேபோல ஒரு ஆணின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால், அந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது.

9.அதையடுத்து கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், ‘2 இள வயதுப் பெண்கள் தான் கோயிலுக்குள் நுழைந்துள்ளனர்' என்று கூறினார். சபரிமலை கோயிலிடமிருந்து வாங்கிய ஆவணங்கள்படி இந்தத் தகவலை அவர் சொன்னார். 

10.சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெண்கள் ஆலயத்துக்குள் நுழைவதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். ஆனால், சிறிது நாள் கழித்து, ‘பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்பவர்களின் வாதத்திலும் நியாயம் உள்ளது' என்று பல்டி அடித்தார். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ராகுல் காந்தி, ‘ஒரு ஸ்திரமான கருத்தைத் தெரிவிக்க முடியாது' என்று கூறியுள்ளார். 
 

.