This Article is From Feb 22, 2019

‘ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான்..!’- மார்தட்டும் அதிமுக

நடிகர் ரஜினிகாந்த் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எங்களுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அதிமுக கூறியுள்ளது

‘ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான்..!’- மார்தட்டும் அதிமுக

அதிமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’-வில் அதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எங்களுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அதிமுக கூறியுள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா'-வில் அதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ரஜினி,  ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை. நான் தொடங்கப் போகும் அரசியல் இயக்கத்தின் இலக்கு அடுத்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான். தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்களோ, அவர்களுக்கே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்' என்று மக்களவைத் தேர்தல் குறித்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ‘நமது அம்மா' நாளிதழ், ‘தமிழகத்து தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாய் தீர்த்து வைப்பதற்கு யார் திட்டங்கள் வகுத்து உறுதியாக அதை செயல்படுத்துவாரென நம்புவீர்களோ அவர்களுக்கு வாக்களிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ்நாடு… இது தான் நடைபெற இருக்கும் நாளைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் உளமார விடுத்திருக்கும் செய்தி. 

அது சரி.. முடி ஆட்சி காலம் தொட்டு இன்றைய குடி ஆட்சி காலம் வரை கன்னித்தீவு கதையாக நீடித்த பொன்னி ந்தி தாவாவுக்கு பொறுப்போடு முடிவு கட்டி காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது தமிழகத்தின் இலை அரசும் தாய் நாட்டின் தாமரைப் பூ அரசும்தானே.

அதுபோலவே.. வீணாக கடலில் கலக்கும் கோதாவரி தண்ணீரை கிருஷ்ணா நதி வழியாக தமிழகத்துக்கு பாசனப் பரப்பாகிட மாநிலங்களுக்கு இடையே நதி நீரை இணைக்கும் மகத்தான திட்டத்தையும் கூடவே காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தாயாளும் தமிழக அரசு மேற்கொள்ள தாமரை அரசே உதவிட தயாராக இருப்பதோடு இதற்கான திட்டச் செலவுகளில் 90 சதவிகிதத்தை மத்திய அரசே மனதார ஏற்பதற்கு தயார் என்றும் நீருக்கு தவிக்கிற தமிழகத்துக்கு நிரந்தரமாய் நிம்மதியை தருவதற்கு பாரதத்தை அளுகிற பாஜக அரசு பரிவோடு முன் வருகையில்..

ஈரிலைக்கும் தாமரைக்கும் மாங்கனிக்கும் இன்னபிற கழகத்தின் கூட்டணிக்குமே தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுமென்பதே உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் தன் ரசிகர்களுக்கு உளமார விடுத்திருக்கும் உள்ளார்ந்த அன்புக் கட்டளை என்றால் இதற்கு ஆக்ஸ்போடு டிக்‌ஸ்னரி கொண்டு அர்த்தம் தேட அவசியம் இல்லைதானே?' என்று கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 

.