This Article is From Jul 26, 2019

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்!

அனைத்து போலீசாரும் பணியில் இருப்பவர்களும் பணியில் இல்லாதவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இந்தநிலையில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை போலீசார் ஓட்டிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுள்ள ஜே.கே.திரிபாதி அண்மையில் பிறப்பித்த உத்தரவில், 

‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து போலீசாரும் பணியில் இருப்பவர்களும் பணியில் இல்லாதவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் ஆணையர்களுக்கும், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அவர் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில், சென்னை மாம்பலம் உதவி ஆய்வாளர் மதன்குமார் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

.