This Article is From Sep 13, 2019

Road Fines: உயர்த்தப்பட்ட சாலை விதிமீறல் அபராதங்கள் குறைக்கப்படுமா..?- மத்திய அமைச்சரின் பதில்

நேற்றுதான் புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது குஜராத் அரசு.

மேற்குவங்க அரசு, அபராதத் தொகை குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. 

New Delhi:

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மூலம், சாலைப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன. இந்த புதிய விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தன. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த இந்த புதிய விதிமீறல்களை, குஜராத்தில் ஆளும் பாஜக அரசு திருத்தியுள்ளது. அந்தத் திருத்தத்தின்படி அபராதங்களின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 

“சில மாநிலங்கள் அபராதத் தொகையைக் குறைக்கின்றன. பணத்தைவிட வாழ்க்கை முக்கியமில்லையா? இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டதற்குக் காரணம், வாழ்க்கை காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில்தான்” என்று NDTV-க்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார் கட்கரி. 

அவர் மேலும், “சட்டத்தைப் பார்த்து மக்கள் அஞ்சி நடக்க வேண்டும். நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கியது எதற்காக? சட்டத்தின் மீது மக்களுக்கு பயம் வரவேண்டும் என்பதால்தான்” என்றார். 

நேற்றுதான் புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது குஜராத் அரசு. அதேபோல மேற்குவங்க அரசும், அபராதத் தொகை குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. 

மாநிலங்களை புதிய விதிமுறைகள் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று பணிப்பீர்களா என்று கட்கரியிடம் கேட்டபோது, “அப்படி செய்ய முடியாது. வேண்டியவர்கள் பின்பற்றிக் கொள்ளலாம். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படி செய்ய வேண்டாம்.

இந்த நாடு உயிரைக் காக்கும் நோக்கில் சிந்திக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,50,000 பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கிறார்கள். அதில் 65 சதவிகிதம் பேர் 18 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள். அவர்கள் தீவிரவாத தாக்குதலினாலோ, கலவரத்தினாலோ கொல்லப்படவில்லை. ஆனால் புதிய விதிமுறைகளை சரியாக அமல்படுத்த மாநில அரசுகளின் ஆதரவு வேண்டும். இந்த நடவடிக்கையானது கட்சிக்கு அப்பாற்பட்டது” என்றவர், 

“அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்த பின்னர்தான், புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன” என்று கூறி முடித்துக் கொண்டார். 

.