உலகளாவிய நிறுவனங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் இந்திய நிறுவனங்களுக்கு உள்ளது என்று நிதின் கட்கரி கூறினார்.
ஹைலைட்ஸ்
- மிகப்பெரும் கட்டுமானங்களை உருவாக்குவதற்கான நமது விதிகள் மிகவும் பழமையானவை
- சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதும் சரியானதாக தெரியவில்லை
- உலகில் நம்முடைய போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும்
New Delhi: சமீபத்தில் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய அரசு சீன நிறுவனங்களின் 59 மொபைல் அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களை பங்கேற்க இந்தியா அனுமதிக்காது.“ என்றும், “சீனாவிலிருந்து மின்சாரம் வழங்கல் உபகரணங்கள் மற்றும் கூறுகளை இறக்குமதி செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அரசாங்க அனுமதி தேவைப்படும்.“ என்று மின்சார அமைச்சகமும் சமீபத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது, “சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை, அவை தேசிய நலனுக்காகவும், இந்திய நிறுவனங்களின் நலனுக்காகவும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.“ என கட்கரி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
“மிகப்பெரும் கட்டுமானங்களை உருவாக்குவதற்கான நம்முடைய விதிகள் மிகவும் பழமையானவை. பெரிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை கட்டமைப்பதற்கு அனுபவமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என நம்முடைய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இந்திய ஒப்பந்தக்காரர்களுக்கு திறன் இருந்தபோதிலும், அவர்கள் நிதி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் காரணமாக கூட்டு நிறுவனங்களில் நுழைய வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, சீன நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. அதே போல சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதும் சரியானதாக தெரியவில்லை.“ என கட்கரி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த கருத்துக்களை கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், “உலகில் நம்முடைய போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும், இதற்காக நமக்கு குறைந்த விலை மூலதனம் தேவை, MSMEs களில் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) நமது தொழில்நுட்பத்தையும் வெளிநாட்டு முதலீட்டையும் மேம்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாம் சீனாவிலிருந்து PPE (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) கருவிகளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இன்று நம்முடைய MSMEsகள் இதுபோன்ற நல்ல தரமான கருவிகளை உருவாக்கி வருகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 5 லட்சம் கிட்களை உற்பத்தி செய்கிறோம். வர்த்தக அமைச்சகம் நம்முடைய உற்பத்தியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம் இதனை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய செய்ய வேண்டும்." என்று ஆத்மனிர்பர் பாரத் திட்டம் குறித்து கட்கரி கூறியுள்ளார்.