This Article is From Nov 01, 2018

நாடாளுமன்ற சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்றார் இலங்கை அதிபர் சிறிசேனா!

இலங்கை நாடாளுமன்றத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதை வாபஸ் பெற்றார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா

நாடாளுமன்ற சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்றார் இலங்கை அதிபர் சிறிசேனா!

இலங்கை நாடாளுமன்றத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதை வாபஸ் பெற்றார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றிருந்தது. 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியில் சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிரான சிறிசேனா ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.

அதைத் தொடர்ந்து, மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16-ம்தேதி வரைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.

இதனால் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்றார் சிறிசேனா.

இன்னும் ஒரு வாரத்தில் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் 225 தொகுதிகளில் தற்போது அவருக்கு 101 பேரின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. விக்கிரமசிங்கேவின் தரப்பிலிருந்து 5 பேரை தன் வசம் இழுத்துள்ளார் ராஜபக்சே. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 113 பேரின் ஆதரவு அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் 16 பேரும், ஜேவிபி கட்சி சார்பாக 6 பேரும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்த அரசியல் குழுப்பத்திற்கு முன்னர் விக்கிரமசிங்கேவிற்கு 106 பேரின் ஆதரவு இருந்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவால் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். சீக்கிரமே நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் ஓரளவுக்கு முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.