This Article is From Dec 21, 2018

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் அனைவரும் விடுவிப்பு: 10 முக்கியத் தகவல்கள்!

சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில், மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது

Mumbai:

சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில், மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. '2005 ஆம் ஆண்டு நடந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லாததால், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள்' என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் நடந்த இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில், ரவுடி என்று சொல்லப்படும் சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது கூட்டாளி துள்சிராம் பிரஜபதி ஆகியோர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து பல ஆண்டுகளாக விசாரித்து வரும் சிபிஐ, ‘அரசியல் ஆதாயத்துக்காக இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது' என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் முதலில் பாஜக தலைவர் அமித்ஷா உட்பட 38 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து முக்கிய 10 தகவல்கள்:

1. இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து குஜராத் போலீஸ், ‘2005 ஆம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டார். அவருக்கு லஷ்கர்-இ- தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்தது. குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை அவர் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்' என்று தெரிவித்துள்ளது.

2. சிபிஐ தரப்பு இது குறித்து தெரிவிக்கையில், ‘நவம்பர் 22, 2005 ஆம் ஆண்டு, சொராபுதீன், அவரது மனைவி கவுசார் பி மற்றும் துள்சிராம் குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குஜராத் போலீஸாரால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டனர்' என்று கூறியுள்ளது.

3. சிபிஐ தரப்பு மேலும், ‘கடத்தப்பட்ட 4 நாட்கள் கழித்து சொராபுதீன் கொல்லப்பட்டார். கவுசார் பி, நவம்பர் 29 ஆம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்' என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவித்துள்ளது.

4. '2006, டிசம்பர் 27அன்று பிரஜபதி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டார்' என்றுள்ளது சிபிஐ.

5. அதே நேரத்தில் போலீஸ் தரப்பு, ‘அஹமதாபாத்திலிருந்து ராஜஸ்தானுக்கு நீதிமன்ற விசாரணைக்காக துள்சிராம் பிரஜபதியை அழைத்துச் சென்றோம். அப்போது அவர் தப்பிக்க முயன்றார். வேறு வழியில்லாமல் அவரை சுட்டுவிட்டோம்' என்கிறது.

6. அமித்ஷா-வைத் தவிர, ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கடாரியா, குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைவர் பிசி பாண்டே, மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜூனியர் லெவல் அதிகாரிகள் தான், தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

7. பாஜக தலைவர் அமித்ஷா-வை விடுதலை செய்த நீதிமன்றம், ‘அமித்ஷாவின் பெயர் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று தீர்ப்பளித்தது.

8. போலி என்கவுன்ட்டர் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்துத்தான் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

9. கடந்த 2012, செப்டம்பரில் வழக்கு விசாரணை குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

10. இந்த வழக்கில் சாட்சியாக இருக்கும் அசாம் கான், ‘சொராபுதீன் மற்றும் துள்சிராம் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர்கள். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளது' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

.