This Article is From Sep 19, 2018

‘இம்ரான் கான் சொன்னால் விராட் கோலி மறுப்பாரா?’ – சித்து பேச்சால் சர்ச்சை

பாகிஸ்தானில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற சித்து, அந்நாட்டின் ராணுவ தளபதியை ஆரத் தழுவினார். இந்த விவகாரம் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானுக்கு சென்றது குறித்து வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்கிறார் சித்து

New Delhi:

இம்ரான் கான் தன்னை ஆரத் தழுவுமாறு விராட் கோலியை கேட்டால் அவர் மறுப்பு
தெரிவிப்பாரா என்று கேட்டு சித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் 18-ந்தேதி புதிய பிரதமர் பதவியேற்பு விழா
நடைபெற்றது. இதில் இம்ரான் கான் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்
கொண்டார். அவரும், பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் சித்துவும் நெருங்கிய
நண்பர்கள் என்பதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சித்துவுக்கு
இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையேற்று பாகிஸ்தானுக்கு சென்ற சித்து, அங்கு அந்நாட்டின் ராணுவ தளபதி
ஜாவித் பாஜ்வாவை ஆரத் தழுவினார். இந்த சம்பவம் இந்தியாவில் சர்ச்சையை
ஏற்படுத்தியது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திக்
கொண்டிருக்கும்போது சித்து ஏன் இப்படி செய்தார்?. அவர் ஒரு தேச துரோகி
என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் என்.டி.டி.வி.க்கு சித்து பேட்டியளித்தார். அப்போது
பாகிஸ்தான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த
சித்து, “இன்று நாம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம். அப்போது
நம் வீரர்கள் விளையாடுவார்களா? அல்லது எதிரி என்று கூறி முதுகை
திருப்பிக் கொள்வார்களா?. இன்னொன்றை சொல்கிறேன். ஒரு பேச்சுக்கு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மைதானத்திற்கு வருகிறார். வந்து கேப்டன்
விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறிவிட்டு அவரை ஆரத்தழுவ விரும்புவதாக
சொல்கிறார். இதை விராட் கோலி ஏற்பாரா? அல்லது முதுகை திருப்பிக்
கொள்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

சித்துவின் இந்த பதிலும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

.