This Article is From Jun 15, 2018

சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்… அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்!

 ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்

சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்… அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்!

ரைசிங் காஷ்மீர் செய்தித்தாளில் வெளிவந்துள்ள புகாரியின் புகைப்படம்

ஹைலைட்ஸ்

  • நேற்று மாலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் புகாரி
  • அவருடன் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களும் பலியாயினர்
  • புகாரினயின் கொலைக்கு எந்த அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை
Srinagar:

 ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் இறுதி ஊர்வலம் இன்று பாரமுல்லா மாவட்டத்தில் இருக்கும் அவரின் சொந்த கிராமமான க்ரீரியில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புகாரிக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுஜாத் புகாரி, நேற்று ஸ்ரீநகரில் இருக்கும் தனது செய்தித்தாள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல மாலை 7:30 அளவில் வெளியே வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து புகாரி மற்றும் அவரது பாதுகாப்புக்காக இருந்த காவலர்களையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் புகாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முக்கியமான பத்திரிகையின் ஆசிரியரே இப்படி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த 2000 ஆம் ஆண்டு அவர் மீது நடந்த தாக்குதலை அடுத்து, அவருடன் பாதுகாப்புக்கு காவலர்கள் இருக்கும்படி செய்தது அரசு. இருந்தும் நேற்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

 

rising kashmir

இந்த சம்பவத்தை ரைசிங் காஷ்மீர் அலுவலகத்தின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா ஒன்று பதிவு செய்ததில், கொலையாளிகள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது. அவர்களில், வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மட் அணிந்திருந்தார். மற்ற இருவர்களும் தங்களின் அடையாளத்தை மறைக்க முகமூடி போட்டிருந்தது தெரிகிறது. ஒரு பையில் அவர்கள், துப்பாக்கியை மறைத்து எடுத்துச் செல்வதும் வீடியோ பதிவில் தெளிவாக பார்க்க முடிகிறது.

இச்சம்பவம் குறித்து ஜம்மூ காஷ்மீர் போலீஸின் உயர் அதிகாரி எஸ்.பி.வைத், 'கொலையாளிகள் ஷுஜாத் புகாரி, வெளியே வருவதற்கு வெகு நேரம் காத்திருந்தது தெரிகிறது. இது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட செயல். ஆனால், இதுவரை இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஷுஜாத் புகாரியுடன் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களையும் கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. எல்லாரும் ரம்ஜான் அன்று வீட்டுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து இதைச் செய்துள்ளனர்' என்று தெரிவித்தார். 

இந்நிலையில் புகாரியின் இறுதி ஊர்வலத்தில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் மெஹபூபா முப்டி, எதிர்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு புகாரிக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் ஆசிரியராக இருந்த ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் புகாரியின் கருப்பு வெள்ளைப் புகைப்படம் அச்சிடப்பட்டு உருக்கமான அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து முப்டி, 'புகாரியைக் கொன்றதன் மூலம் தீவிரவாதம் அதன் மிகக் கேவலமான முகத்தைக் காட்டியுள்ளது. அதுவும் ரம்ஜானின் போது. அமைதியை நிலைநாட்ட நாம் எடுக்கும் முன்னெடுப்புகளை சீர்குலைக்கும் சக்திகளை எதிர்த்த நாம் எல்லோரும் ஓரணியில் சேர வேண்டும். நீதி நிலைநாட்டப்படும்' என்று ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். 

.