This Article is From Jan 18, 2020

‘பாகிஸ்தானியர்கள் இந்தியா வரும்போது நாங்கள் பெல்காமுக்கு செல்லக்கூடாதா?’ – சிவசேனா கேள்வி!!

பாகிஸ்தானியர்கள், வங்க தேசத்தவர், ரோஹிங்யாக்கள் இந்தியாவுக்குள் வருகின்றனர். இங்கிருக்கும் நாங்கள் கர்நாடக மாநிலம் பெல்காமுக்கு செல்லக் கூடாதா என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பாகிஸ்தானியர்கள் இந்தியா வரும்போது நாங்கள் பெல்காமுக்கு செல்லக்கூடாதா?’ – சிவசேனா கேள்வி!!

பாஜக ஆளும் கர்நாடகத்தின் பெல்காமுக்கு செல்ல சஞ்சய் ராவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Mumbai:

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பெல்காம் மாவட்டம் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதனால், சிவசேனா தலைவர்கள் பெல்காமுக்கு செல்ல கர்நாடகா தடை விதித்திருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தானியர்களே இந்தியா வரும்போது, நாங்கள் பெல்காமுக்கு செல்லக் கூடாதா என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா – கர்நாடகா எல்லையில் பெல்காம் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மை மக்கள் மராத்தி பேசுபவர்களாக உள்ளனர். இதனை மகாராஷ்டிராவுடன் இணைப்பதற்கு அம்மாநில கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கு கர்நாடக கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

பதற்றமும், பிரச்னையும் ஏற்படும் என்பதால் மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியினர் பெல்காமுக்கு செல்ல கர்நாடக அரசு தடை விதித்திருக்கிறது. இதுகுறீத்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-

பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர், ரோஹிங்யாக்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியும். ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் பெல்காமுக்கு செல்ல முடியாது. இந்த விவகாரத்தில் பிரச்னை இருப்பது உண்மைதான். அதற்காக இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது.

பெல்காமில் கலாசார, இலக்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான் அங்கு செல்ல வேண்டும். அங்குள்ள மக்களுடன் பேச வேண்டும். ஆனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. நடக்கது நடக்கட்டும்.

இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1980 களில் மராத்தி மொழி போராட்டக்காரர்கள் போராட்டத்தின்போது உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் பெல்காமில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்க மகாராஷ்டிர அமைச்சர் ராஜேந்திர பாட்டீலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரை நேற்று போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

.