This Article is From Nov 12, 2019

’அலைகளை கண்டு நீ பயந்தால்..’ மருத்துவமனையில் இருந்து சஞ்சய் ராவத் நெகிழ்ச்சி ட்வீட்!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா 48 மணி நேரம் அவகாசம் கோரிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்தே, சஞ்சய் ராவத் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

’அலைகளை கண்டு நீ பயந்தால்..’ மருத்துவமனையில் இருந்து சஞ்சய் ராவத் நெகிழ்ச்சி ட்வீட்!!

மும்பை லீலாவதி மருத்துவமனையில் சஞ்சய் ராவத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mumbai:

மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை எடுத்துக்கொண்ட சில மணி நேரங்களில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இன்று காலை பிரபல இந்தி கவிஞர் சோஹன் லால் திவேதி எழுதிய ஒரு கவிதையை தனது ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். 

அதில், ‘அலைகளை கண்டு நீ பயந்தால், கடலை கடக்க முடியாது.. முயற்சி செய்தவர்கள், ஒரு போதும் தோல்வியுற்றதில்லை' (நாங்கள் நிச்சயம் வெற்றி பெருவோம்) என்று அவர் கூறியுள்ளார். 

சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் நேற்று பிற்பகல் நெஞ்சுவலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக ஐஏஎன்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று இரவு சஞ்சய் ராவத்திற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடந்துள்ளது. தற்போது அவர் உடல்நலம் தேறி அதிலிருந்து மீண்டு வருவதாக அவரது சகோதரர் சுனில் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா  48 மணி நேரம் அவகாசம் கோரிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்தே, சஞ்சய் ராவத் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார். 

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றும் வகையில், மத்திய அமைச்சர் பதவியையும் சிவசேனா ராஜினாமா செய்துள்ளது. 

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணிக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், காரிய கமிட்டியில் ஆலோசனை நடத்திவிட்டு திரும்ப அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி அமைக்க மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடுவும் விதித்துள்ளார். 

சஞ்சய் ராவத் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னாவின்' நிர்வாக ஆசிரியர் ஆவார். அதில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டை மிக உறுதியுடன் சஞ்சய் ராவத் தெரிவித்து வந்தார். 

கடந்த அக்.24ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் பாஜகவுடன் நடந்து வரும் அதிகாரப்பகிர்வு மோதல் தொடர்பாக தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பதும், ட்வீட்டரில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதும், என சஞ்சய் ராவத் பரபரப்பாக இயங்கி வந்தார்.  
 

.