தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ''சஞ்சாரம்" என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.
இலக்கிய படைப்புகளுக்கான மிகப்பெரும் கவுர விருதாக சாகித்ய அகாடமி விருதுகள் கருதப்படுகிறது. சாகித்ய அகாடமியால் அங்கீகாரம் வழங்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த நூல்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நூல்களின் விவரம் அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக விருதுகளுக்கு ஒப்புதல் வழங்கும் கூட்டம் அகாடமியின் தலைவர் சந்திரசேகர் கம்பர் தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ் மொழியில் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாதஸ்வரத்தை வாசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கை நிலைகளை படம்பிடித்துக் காட்டும் வகையில் சஞ்சாரம் என்ற நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப்பணியை மேற்கொண்டு வரும் எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறை பூர்வீகமாக கொண்டவர். சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்துச் செய்தியில், ''எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவருக்கு விருது அறிவித்திருப்பது அவரது புகழுக்கு மணி மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த எஸ் ராமகிருஷ்ணனுக்கு மக்கள் சார்பில் எனது பாரட்டுகள். மேன்மேலும் இதுபோல் பல்வேறு விருதுகள் பெற வாழ்த்துக்கள்'' என தெரிவித்துள்ளார்.