சபரிமலை போராட்டத்தால் போர்க்களமானது கேரளா - 750 பேர் கைது : 10 Points

நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் வீசி வலது சாரி அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன. சாலைமறியல், கடையடைப்பால் கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் பல பகுதிகளில் பாஜக மற்றும் சபரிமலை கர்மா சமிதி ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன.

Thiruvananthapuram:

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முதல் கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் உள்ளிட்வற்றை வீசி வலது சாரி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர் ஒருவர் கல்வீச்சில் உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது. இதுவரையில் மொத்தம் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். போலீஸ் தரப்பில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

கேரள வன்முறை குறித்த 10 தகவல்கள்:

1. வலது சாரி அமைப்பான சபரிமலை சர்மா சமிதி முழு அடைப்புக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் இதனை கருப்பு நாள் என்று கூறியது.

2. நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் உள்ளிட்டவற்றை நேற்று காலை முதல் வீசி வலதுசாரி அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன. கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வன்முறை அதிகம் காணப்பட்டது.

3. பொதுமக்களும் வன்முறையில் காயம் அடைந்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினருடன் பாஜகவுக்கு நடந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

4. கேரள வன்முறைகளுக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் காரணம் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

5. பக்தர்கள் பெண்களை தடுக்கவில்லை என்றும் எல்லோரும் செல்லும் பாதையில்தான் அவர்கள் தரிசனத்திற்கு சென்றார்கள் என்றும் பினராயி கூறியுள்ளார்.

6. வலதுசாரி மற்றும் பாஜகவினர்தான் கேரள மாநிலத்தை போர்க்களமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக பினராஜி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

7. கேரளாவில் நடந்திருக்கும் வன்முறை குறித்து அறிக்கை அளிக்குமாறு முதல்வர் பினராயி விஜயனை கவர்னர் சதாசிவம் கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று சதாசிவம் ட்விட் செய்திருக்கிறார்.

8. கல்வீச்சில் உயிரிழந்த போராட்டக்காரர் சந்தன் உன்னிதானை தாக்கியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

9. 2 பெண்கள் தரிசனம் செய்த பின்னர் சபரிமலை கோயில் கதவுகள் மூடப்பட்டன. இதனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

10. செப்டம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பு மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனுடன்தான் இந்த வழக்கு விசாரிக்கப்படும என நீதிபதிகள் கூறி விட்டனர்.