ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் 3 பேரை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-யை கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், 'ஜனநாயக வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் நிர்வாக நடவடிக்கைகளால் நசுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் தீர்மான அறிக்கையில், 'கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களுடன் பாஜக முன்பு கூட்டணி அமைத்திருந்தது. அவர்கள் பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்துபவர்களோ, ஜம்மு காஷ்மீர், தேச நலனுக்கு எதிரானவர்களோ அல்ல.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்துள்ள உரிமைகள் மற்றும் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். ஜம்மு காஷ்மீரில் நிலைமை சரியாகி விட்டது என்று மத்திய அரசு பொய் கூறுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது எதிர்க்கட்சிகள் மத்தியில் வேறுபாடு இருப்பதை உணர்த்தியுள்ளது.
தீர்மான அறிக்கையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் கையெழுத்திடவில்லை. இதில், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
காங்கிரஸ் எதற்காக இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.