கமல்ஹாசன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், '20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது' என்று பரபரப்பாக பேசினார்.
அவர் மேலும், '20 தொகுதியிலும் இடைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தலில் மக்கள் நல்ல பதிலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்கள் சரியான முடிவெடுப்பார்கள். முறைகேடு இல்லாத வகையில் தேர்தலை சந்திப்போம். அரசியலில் சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம். ஜனநாயகம் ஜெயிக்கும்' என்று கூறினார்.
அவரிடம் இலங்கையில் நடந்து வரும் அரசியல் குழப்பம் குறித்து கேட்டபோது, ‘இலங்கையில் என்றாவது ஒருநாள் ஜனநாயகம் வெல்லும். நம் நாட்டிலேயே ஜனநாயகம் சரியில்லாத போது, மற்ற நாட்டின் ஜனநாயகம் குறித்து நான் பேச விரும்பவில்லை' என்று பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து, ‘நான் எந்தக் கட்சியின் குழலலோ ஊதுகுழலோ கிடையாது. நான் ஒரு கருவி. மக்களின் கருவி' என்று தெரிவித்தார்.