This Article is From Jan 25, 2020

ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும்: ராஜேந்திர பாலாஜி

அதிமுக எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் கார்கள் மீது தாக்குதல் நடத்தும் கதையெல்லாம் இங்கு எடுபடாது. அதே வன்முறையை எங்களுக்கும் செய்யத் தெரியும்.

ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும்: ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் கோழைகள் இல்லை. நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம் - ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் ஒன்றும் கோழைகள் இல்லை, ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கம்பம் நோக்கி, வந்த எம்.பி ரவீந்திரநாத் குமார் காரை 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்தனர். 

நாடாளுமன்றதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததை கண்டிக்கும் விதமாக ரவீந்திரநாத் காரை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியும், கறுப்புக்கொடி காட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள், கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்ளிடம் கூறியதாவது, 

வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது. ஒருவேளை அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் பிடிக்கவில்லை என்றால் அதை சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். இல்லை தங்களின் உணர்வில் இருக்கும் நியாயத்தை நிரூபிக்க வேண்டும். 

அதைவிடுத்து அதிமுக எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் கார்கள் மீது தாக்குதல் நடத்தும் கதையெல்லாம் இங்கு எடுபடாது. அதே வன்முறையை எங்களுக்கும் செய்யத் தெரியும். ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும். அந்த அளவுக்கு அதிமுகவினர் கோழைகள் இல்லை. நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம்.

இத்தகைய தாக்குதல்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே தூண்டி விடுகின்றன" என்று அவர் கூறினார்.

.