மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- சூழலை கருத்தில் கொண்டு கொள்கை மாறலாம் என்கிறது இந்தியா
- முக்கிய அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்
- பொக்ரானி அணு ஆயுத சோதனை நடத்திய வாஜ்பாயின் நினைவு நாள் இன்று.
எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
Pokhran is the area which witnessed Atal Ji's firm resolve to make India a nuclear power and yet remain firmly committed to the doctrine of 'No First Use'. India has strictly adhered to this doctrine. What happens in future depends on the circumstances.
— Rajnath Singh (@rajnathsingh) August 16, 2019
இந்தியாவில் கடந்த 1974-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அது மீண்டும் கடந்த 1998-ல் வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு பாஜக மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், வாஜ்பாய் நினைவு நாளில் பொக்ரானில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின்போது மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியாவை அணு ஆயுத பலம் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதில் அடல் பிகாரி வாஜ்பாய் உறுதியாக இருந்தார். அதற்கான களமாக பொக்ரான் அமைந்தது. இந்தியா ஒரு அணுஆயுத சக்தி கொண்ட நாடு. இருப்பினும் எதிரிநாடு அணு ஆயுதத்தை எடுக்காத வரையில் இந்தியா அதனை கையில் எடுக்காது என்ற கொள்கையை வைத்துள்ளது. இதனை உறுதியாக பின்பற்றியும் வருகிறது. இருப்பினும். எதிர்காலத்தில் சூழலை கருத்தில் கொண்டு மாற்றம் ஏற்படலாம்' என்று தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சதித் திட்டங்களை நிறைவேற்ற பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதலில் இந்தியா 40 துணை ராணுவத்தினரை பறிகொடுத்தது. இதன்பின்னர் இந்தியா நடத்திய பாலகோட் அதிரடி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் பாதுகாத்து வைத்திருப்பது உள்ளிட்டவைகளால் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.