This Article is From Jul 20, 2019

‘’கவர்னரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்’’ – 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு பதில்!!

ராஜிவ் கெலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘’கவர்னரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்’’ – 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு பதில்!!

7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்கு காத்திருப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஸ்ரீகரன் என்கிற முருகன், சுதந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி ஆகியோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

அவர்களை விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கின்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக கவர்னர் முடிவு எடுக்கலாம் என்று கூறினர்.

இதையடுத்து கடந்த 2018 செப்டம்பர் 9-ம்தேதி ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுவரும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிறை அதிகாரிகள் பரிந்துரைகள், அமைச்சரவை தீர்மானம், வழக்கு விவரம் உள்ளிட்டவை தமிழக கவர்னரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏதும் இந்த விவகாரத்தில் ஏற்படவில்லை. இதற்கிடையே 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவு எடுக்கக்கோரி நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 இந்த மனு குறித்து நீதிபதிகள் கூறுகையில், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 361-ன்படி மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டியதில்லை. அரசியலைமைப்பு சட்ட கடமையை நிறைவேற்ற கவர்னருக்கு முன்னுரிமையும், முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மாநில கவர்னர் ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடந்தாரா என்பது பற்றி அரசியலமைப்பு சட்டம் பிரிவு 226-ன்படி நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தனர். 

இந்த நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 7பேர் விடுதலை குறித்த தீர்மானம் எந்த நிலையில் இருக்கிறது என்றும் அதன் மீது நடவடிக்கை ஏன் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர், இந்த விவகாரம் ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாகவும், அவரது முடிவுக்கு காத்திருப்பதாகவும் கூறினார்.

.