This Article is From Jan 27, 2020

கழுவுற மீனில், நழுவுற மீன் ரஜினி; அவர் பாஜக வலையில் சிக்க மாட்டார்: கே.எஸ்.அழகிரி

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் ஆசிரியர் சோ பாஜகவை விமர்சித்ததை ஏன் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை.

கழுவுற மீனில், நழுவுற மீன் ரஜினி; அவர் பாஜக வலையில் சிக்க மாட்டார்: கே.எஸ்.அழகிரி

கழுவுற மீனில், நழுவுற மீன் ரஜினிகாந்த், அவர் பாஜக கட்சியின் வலையில் சிக்க மாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

கடந்த ஜன.14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்த ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல; மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்தார். இது மேலும், சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,  பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்சிக்கு சார்பாக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. 

பெரியாரை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் ஆசிரியர் சோ பாஜகவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன். அவர் பாஜக கட்சியின் வலையில் சிக்க மாட்டார்.

5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரான கல்வி முறை. திறமை என்ற பெயரில் மனுதர்மத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. பெரியார் பாதையை பின்பற்றி வந்த அதிமுக. இந்த பொதுத்தேர்வை ஏற்றுக்கொண்டது தவறு.

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கமே நடைபெறவில்லை. நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று அவர் கூறினார்.

.