This Article is From Jan 24, 2020

“நீங்க பெரியாரைப் பற்றிப் பேசலாமா..?”- ரஜினியை சூசகமாக வறுத்தெடுத்த சுப.வீ!!

Rajini Periyar Row: “தனது இறுதி காலம் வரை ஓய்வில்லாமல் உழைத்தவர் பெரியார்"

“நீங்க பெரியாரைப் பற்றிப் பேசலாமா..?”- ரஜினியை சூசகமாக வறுத்தெடுத்த சுப.வீ!!

Rajini Periyar Row: "...‘ஓய்வெடு’ என்கிறீர்களே என்று அந்த தொண்டனிடம் சினங்கொண்டார் ஐயா பெரியார்"

Rajini Periyar Row: ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி. 

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார். 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ரஜினியின் இந்த கருத்துகளுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக தலைவர்கள், ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். திராவிட இயக்கத்தினர் கடுமையாக ரஜினியை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், “தனது இறுதி காலம் வரை ஓய்வில்லாமல் உழைத்தவர் பெரியார். பெரியாரின் 90வது பிறந்தநாளின் போது, ஒரு தொண்டன், ‘ஐயா, ஓய்வெடுத்துக்கோங்க' என்றான். அதற்கு பெரியார் கோபப்பட்டார். இந்த மக்கள் கொடுக்கும் பணத்தில்தான் 3 வேளைகளும் உணவு சாப்பிடுகிறேன். அப்படி இருக்கையில் ‘ஓய்வெடு' என்கிறீர்களே என்று அந்த தொண்டனிடம் சினங்கொண்டார் ஐயா பெரியார். 

ஆனால், ஓய்வெடுப்பதற்காகவே இமயமலைக்குப் போகிறவர்கள் இன்று பெரியாரைப் பற்றி எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 95 வயது வரை மக்கள் பணி செய்த பெரியாரைப் பேற்றி பேசுகையில் சற்று நிதானமாக பேச வேண்டும் என்றார். திரையிலேயே நிதானமாக பேசத் தெரியாத நடிகர் அவர். பொது வாழ்க்கையில் அவர் எப்படி நிதானமாக பேசுவார்,” என்று ரஜினியை சூசகமாக கேலி செய்துள்ளார். 

.