This Article is From Jan 23, 2020

“ரஜினி ஏன் அப்படி பேசினார்னா…”- கி.வீரமணி கொடுத்த புதிய விளக்கம்!

Rajini Periyar Controversy: துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்தார் அவர்.

“ரஜினி ஏன் அப்படி பேசினார்னா…”- கி.வீரமணி கொடுத்த புதிய விளக்கம்!

“தமிழகத்தில் பாஜக, வெகு நாட்களாக காலூன்றப் பார்க்கிறது. ஆனால், அது அவர்களால் முடியவில்லை"

Rajini Periyar Controversy: ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி. இப்படிப்பட்ட சூழலில் தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவர் கி.வீரமணி, ரஜினி ஏன் அப்படிப் பேசினார் என்பது குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ரஜினியின் கருத்துகள் குறித்து தற்போது கி.வீரமணி, “தமிழகத்தில் பாஜக, வெகு நாட்களாக காலூன்றப் பார்க்கிறது. ஆனால், அது அவர்களால் முடியவில்லை. பல்வேறு யுக்திகளைக் கையாண்டும் அது நடக்கவில்லை. எனவே, ரஜினி மூலம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதைச் சாதிக்கலாம் என்னும் நோக்கம் இருக்கலாம். இல்லையென்றால், மோடி அரசுக்கு எதிர்ப்பு, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்ற திசைத் திருப்பும் நோக்கிலும் இப்படியொரு விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கலாம்,” என்று கொதித்துள்ளார். 

.