This Article is From Jul 22, 2020

அரசியலமைப்பு நெருக்கடி: ராஜஸ்தான் சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Rajasthan Crisis: தாமதத்திற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

Rajasthan Crisis: அரசியலமைப்பு நெருக்கடி: ராஜஸ்தான் சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Jaipur/ New Delhi:

சச்சின் பைலட் மற்றும் பிற காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசியலமைப்பு நெருக்கடியை தவிர்க்கவும், தாமதத்திற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் சி.பி.ஜோஷி அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தொடர்ந்து, மூன்று நாட்களுக்குள் அந்த நோட்டீஸூக்கு பதிலளிக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, நேற்றைய தினம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஜோஷி கூறும்போது, சபாநாயகர் மட்டுமே தகுதி நீக்கம் குறித்து முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முழு அதிகாரம் உள்ளது. சபாநாயகரின் முடிவுக்கு பின்னர் தான் அதனை நீதித்துறை மறுஆய்வு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். 

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் சபாநாயகருக்கு சாதகமாக வராததை தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை கோரியுள்ளார். ராஜஸ்தான் சட்டசபையில் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆர்வமாக உள்ளதால் தான் உச்சநீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க கோருவதாகவும் ஊகங்கள் தெரிவிக்கின்றன. 

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அனைத்து கட்ட விசாரணைகளையும் முடித்த நிலையில், சச்சின் பைலட் அணிக்கு மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் கிடைத்துள்ளது. சட்டப்பேரவை கூடாத போது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு வாதிட்டுள்ளது. 

முதல்வர் கெலாட் தனக்கு 102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறிவருகிறார். அதாவது பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏ மட்டும் உள்ளார். அதனால், 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், முதல்வர் தரப்பு எளிதாக வெற்றி பெற்று விடலாம். 

அதேபோல், உயர்நீதிமன்ற வழக்கில் வென்று காங்கிரஸ் உறுப்பினர்களாகவே தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக வாக்களித்தால், கெலாட் அரசுக்கு பெரும் தொந்தரவு ஏற்படும். 

சச்சின் பைலட் அணியில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவிடம் 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுபோக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் பலத்துடன் எதிர்கட்சிகளுக்கு 97 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. 

.