This Article is From Jul 29, 2020

3வது முறையாக சட்டசபை கூட்டக் கோரிய முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்!

சட்டசபை கூட்டத்தை கூட்டுவதற்கு அவர் 21 நாட்கள் அல்லது 31 நாட்கள் நோட்டீஸ் கோரினாலும், நாங்கள் வெற்றி பெறுவோம்

3வது முறையாக சட்டசபை கூட்டக் கோரிய முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்!

Jaipur:

ராஜஸ்தானில் 3வது முறையாக சட்டசபை கூட்டத்தொடரை கூட்டக் கோரிய முதல்வர் அசோக் கெலாட்டின் கோரிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நிராகரித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை சட்டசபையை கூட்ட கோரிய முதல்வரின் அந்த முன்மொழிவை ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும், 21 நாள் முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டியது கட்டாயம் என்றும், கொரோனா வைரஸ் நிலைமை குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்மொழிவை ஆளுநர் திரும்பி அனுப்பியதை தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட் நான்காவது முறையாக ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இதனிடையே, ராஜ்பவன் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் கூறும்போது, ஆளுநருக்கு என்ன தான் வேண்டும் என்பது குறித்து, கேட்பதற்காக செல்கிறேன். சட்டசபை கூட்டத்தை கூட்டுவதற்கு அவர் 21 நாட்கள் அல்லது 31 நாட்கள் நோட்டீஸ் கோரினாலும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார். 

21 நாள் நோட்டீஸ், பேரவையில் கொரோனா வைரஸ் திட்டம் உள்ளிட்ட 3 நிபந்தனைகளுடன் முதல்வரின் முந்தைய கோரிக்கையை ஆளுநர் திரும்பி அனுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட் நேற்றைய தினம் 3வது முறையாக சட்டசபையை கூட்ட கோரி கோரிக்கை விடுத்திருந்தார். 

ராஜஸ்தானில் முதல்வருக்கு எதிராக போர்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக முதல்வர் போராடி வருகிறார். கடந்த வாரம் ஆளுநர் இல்லத்தில் சுமார் ஐந்து மணி நேரம் எம்எல்ஏக்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டார். 

சட்டப்பேரவையில் தற்சமயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையின் காரணமாக அவர் சட்டமன்றத்தை கூட்ட அனுமதிக்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தி வருகிறார். ராஜஸ்தான் பேரவையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனிடையே, ஆளுநரிடம் தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என இரண்டாவது முறையாக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்த போது, அவருக்கு ஆளுநர் மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? பொது வெளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் அனுப்பிய வேண்டுகோளில் அதுதொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை 

இதுபோன்ற கொரோனா தொற்று காலத்தில் அனைத்து எம்எல்ஏக்களையும் உடனடியாக கூட்டுவது என்பது கடினமானது. அதனால், எம்எல்ஏக்களுக்கு 21 நாட்கள் அவகாசம் கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். 

முதல்முறையாக சட்டமன்றத்தை கூட்டக்கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை நிராகரித்த ஆளுநர், அதற்கு ஆறு காரணங்களையும் தெரிவித்திருந்தார். அதில் தேதி குறிப்பிடாதது, காரணம் குறிப்பிடாதது என்று தெரிவித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக அனுப்பிய கோப்புகளில், ஜூலை 31ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பொருளாதாரம் குறித்தும் விவாதிக்க உள்ளதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

.