This Article is From Jul 26, 2020

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: ஜூலை 31 சட்டமன்ற கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை

இதற்கிடையில், ராஜஸ்தானில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை திங்கள்கிழமை(நாளை) காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் புதிய பரிந்துரையை மாநில ஆளுநருக்கு வழங்கியுள்ளார்

Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் தற்போது உச்சக்கட்டத்தினை எட்டியுள்ளன. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் சச்சின் பைலட் கொறடா உத்தரவை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார் என சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது காங்கிரஸ். இந்நிலையில் இது குறித்து நீதிமன்றத்தை நாடிய சச்சின் பைலட்டுக்கு சாதமாக நீதிமன்றம் தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக தீர்ப்பளித்தது.

இதன் தொடர்ச்சியாக முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருப்பிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டமன்ற கூட்டம் குறித்து மௌனம் காத்து வருகிறார். ஆளுநரின் அமைதி போக்கை கண்டித்து முதல்வர் தரப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

பின்னர் முதல்வர் அசோக் சட்டமன்ற கூட்டத்தினை கூட்டுமாறு அளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால், பரிந்துரையில் சட்டமன்ற கூட்டம் நடத்துவதற்கான தேதியையோ அல்லது காரணத்தையோ குறிப்பிடவில்லை என்று ஆளுநர் முதல்வரின் பரிந்துரையை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு பரிந்துரையை ஆளுநருக்கு அசோக் கெலாட் விடுத்துள்ளார். அதில் இம்மாதம் 31-ம் தேதியன்று சட்டமன்ற கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும், அதில் கொரோனா குறித்து விவாதிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ராஜஸ்தானில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை திங்கள்கிழமை(நாளை) காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்புகளை தாமதப் படுத்த பாஜக முயல்வதாகவும், ஆளுநர் அழுத்தத்தில் உள்ளார் என்றும் அசோக் கெலாட் தரப்பினர் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.