This Article is From Aug 15, 2018

தமிழகம் முழுக்க நேற்று கொட்டித் தீர்த்த மழை இன்றும் தொடருமா?

இன்றும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கைககள் தெரிவிக்கின்றன

தமிழகம் முழுக்க நேற்று கொட்டித் தீர்த்த மழை இன்றும் தொடருமா?

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று மழை பெய்து மக்களைக் குளிர்வித்துள்ளது. மேற்கு, வட பகுதிகளிலும் நெல்லை, தேனி பகுதகளில் நேற்று மழை பெய்தது. இன்றும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கைககள் தெரிவிக்கின்றன.

சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை வேளச்சேரி, கிண்டி, கோயம்பேடு போன்ற நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மேலும் அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மழையால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருத்தணியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. வடக்கே காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் என பல பகுதிகளிலும் மழை பெய்தது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக பள்ளிகள், திருமண மண்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திண்டுகல் மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. தேனி மாவட்டம் போடி, தேவாரம், பெரியகுளம் பகுதிகளில் மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக பல அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தாமிரபரணி ஆற்று ஓரம் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலையில் குத்திரபாஞ்சான் அருவி, அனுமன் நதி ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில்:

"கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழை பெய்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழை தொடரும். தமிழகம், கர்நாடகாவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையிலும் இன்று மாலை வரை லேசான தூறல் இருக்கும். சில இடங்களில் மழை பெய்யலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

.