This Article is From Oct 31, 2018

‘ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பியுங்கள்!’- உச்ச நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற போது, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

‘ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பியுங்கள்!’- உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

New Delhi:

ரஃபேல் ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஆவணங்களை 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்ற முறை நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம், ‘மத்திய அரசு, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அப்படி சமர்பிக்கப்படும் ஆவணங்களில், விமானத்தின் விலை குறித்த விவரங்களை அளிக்க வேண்டாம்' என்று கூறியது.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், ‘மூடப்பட்ட ஒரு கவரில், ரஃபேல் விமானங்கள் குறித்தான விலை குறித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த விவரம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த போது மேற்குறிப்பிட்ட உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பித்தது நீதிமன்றம்.

ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேலும், ‘நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து அரசு விவரம் கொடுத்தால், அது குறித்து மனுதாரர்களுக்குத் தெரிவிக்கப்படாது. மனுதாரர்கள் எந்த அடிப்படையில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது மற்றும் அதன் விலை குறித்தான தெளிவான தகவல்களை கேட்கின்றனர். பொதுத் தளத்தில் வெளியிடும் படியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள், 59,000 கோடி ரூபாய்க்கு இறுதியாகியுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து, நீதிமன்ற மேற்பார்வையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற போது, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக இறுதி செய்யப்பட்டது' என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசும், ரிலையன்ஸ் குழுமமும் மறுத்துள்ளன.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு, ‘தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காக ரஃபேல் ஒப்பந்தம் குறித்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என்று வாதிட்டுள்ளது. 

.