This Article is From Dec 24, 2019

CAA-க்கு எதிர்ப்பு: பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!

கேரளாவைச் சேர்ந்தவர் மாணவி ராபிகா அப்துரேஹிம், மாஸ் கம்யூனிகேஷில் முதுகலைப்படிப்பை முடித்துள்ள இவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

CAA-க்கு எதிர்ப்பு: பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!

எதற்காக அந்த போலீஸ் அதிகாரி தன்னை அரங்கத்தில் இருந்து வெளியேற்றினார் என்ற காரணம் தனக்கு தெரியவில்லை என்றார் மாணவி ராபிகா.

Puducherry:

குடியரசுத்தலைவர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக ராபிகா என்ற புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி குற்றம்சாட்டியுள்ளார். 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த 27வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.   

கேரளாவைச் சேர்ந்தவர் மாணவி ராபிகா அப்துரேஹிம், மாஸ் கம்யூனிகேஷில் முதுகலைப்படிப்பை முடித்துள்ள இவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மாணவி ராபிகா கூறும்போது, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பட்டமளிப்பு விழா துவங்கும் முன்பு விழா அரங்கத்தில் இருந்து தன்னை வெளியேற்றியதாகவும், தொடர்ந்து குடியரசுத்தலைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சென்ற பிறகே அரங்கத்திற்குள் தான் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எதற்காக அந்த போலீஸ் அதிகாரி தன்னை அரங்கத்தில் இருந்து வெளியேற்றினார் என்ற காரணம் தனக்கு தெரியவில்லை என்றார் மாணவி ராபிகா. 

தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்த மாணவி, பட்டமளிப்பு சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளார். 

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழத்தை விட்டு சென்ற பிறகு பல்கலைக்கழக துறை தலைவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கியுள்ளனர். 

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, பட்டமளிப்பு விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. எங்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு வெளியே என்ன நடந்தது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வளாகத்தை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

.