கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தினை எதிர்த்து ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை ஆதரித்து பேரணி நடத்தப் போவதாக வலதுசாரி குழுக்களின் ஒன்றான இந்து சேனா அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்து சேனா அமைப்பின் பேரணி அறிவிப்பையடுத்து ஷாஹீன் பாக் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் இந்து சேனா அமைப்பினர் அறிவிப்பினை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கு அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், அசம்பாவிதங்களையும் தடுப்பதும்தான் எங்கள் நோக்கம்" என்று மூத்த காவல்துறை அதிகாரி டி.சி.ஸ்ரீவஸ்தவா கூறினார்.
பெண்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். கடந்த மாதம், அவர்கள் போராட்டக்களத்திலிருந்து சாலைகளில் அணிவகுக்கத் தொடங்கினர். ஆனால், காவல்துறையினர் திரும்ப வருமாறு வற்புறுத்தியிருந்தனர்.
ஷாஹீன் பாக் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. வாகன ஓட்டிகள் அவசர நேரத்தில் நீண்ட மாற்றுப்பாதை காரணமாகச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கள் ஷட்டர்களைக் மூடியே வைத்திருக்கும் அப்பகுதியில் உள்ள சில கடைக்காரர்கள், தங்களின் வியாபாரம் நஷ்டத்தில் ஓடுவதாகக் கூறியுள்ளனர்.
ஷாஹீன் பாக் பகுதியிலிருந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை (திருத்த) சட்டம் அல்லது சி.ஏ.ஏ-க்கு எதிரான இந்த எதிர்ப்பானது நாடு தழுவிய போராட்டங்களின் மையமாகவும், பாஜகவின் கவனிக்கத்தக்கக் களமாகவும் உருவெடுத்துள்ளது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது முதன்முறையாக, மதத்தை இந்திய குடியுரிமையின் ஓர் தகுதியாக மாற்றுகிறது. மத துன்புறுத்தல் காரணமாக மூன்று முஸ்லீம் ஆதிக்க அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்தியாவுக்கு அகதிகளாக வரும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த சட்டம் உதவும் என அரசாங்கம் கூறுகிறது.
இந்த மசோதா முஸ்லிம்களுக்குப் பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.