This Article is From Mar 15, 2019

பொள்ளாச்சி விவகாரம்: திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனுத்தாக்கல்!

திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

பொள்ளாச்சி விவகாரம்: திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனுத்தாக்கல்!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.

இதனிடையே, கடந்த 25ஆம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் சிபிஐக்கு பரிந்துரை செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொள்ளாச்சியில் ஒரு சில கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திருநாவுக்கரசு வீட்டில் ஏற்கனவே சிபிசிஐடி போலீஸ் சோதனை நடத்தியது. சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்துள்ள மனு இன்றே விசாரணைக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

.