This Article is From Mar 11, 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், போலீசில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக அதிமுக கட்சியே சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் விளக்கம் அளித்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் என்றும் முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளது, தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

.