புதிய கல்வி கொள்கை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது: பிரதமர் மோடி

National Education Policy: மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படும் போது, அந்த விஷயத்தை பற்றிய அவர்களது புரிதல் மிகவும் சிறப்பாகிறது.

புதிய கல்வி கொள்கை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது: பிரதமர் மோடி

New Delhi:

இந்தியாவில் 34 ஆண்டுகால பழமையான கல்வி முறையை மாற்றியமைக்கும் தேசிய கல்வி கொள்கை எந்த ஒரு பகுதியிலும் சார்பு குறித்த கவலைகளை எழுப்பவில்லை, என்பது "மனதைக் கவரும்" விஷயமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவையால் புதிய கல்வி கொள்கை அங்கீகரிக்கப்பட்டது. 34 ஆண்டுகால கல்வி தொடர்பான தேசிய கொள்கையை மாற்றியமைக்கிறது. மேலும், பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்நிலையில், இன்று புதிய கல்வி கொள்கை கீழ் உருமாறும் உயர்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

அதில், "பழைய கொள்கை என்பது என்ன சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது, ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம்" என்றார். 

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து இன்று இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு கருத்துகளும், பரிந்துரைகளும் வந்துள்ளன. இது குறித்து மக்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இது பரவலாக வரவேற்கப்பட்டு வருகிறது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த பகுதியிலும் ஒரு சார்பாக உள்ளதாக யாரும் கூறவில்லை. அது மிகப்பெரிய மனதை கவரும் விஷயம். தொடர்ந்து, அனைவரும் இது எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது என்பதில் கவனம் செலுத்துகின்றனர் . 

இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையில் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை தான் மிகவும் முக்கியமான உந்துதல்களில் ஒன்றாகும். 

மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்படும் போது, அந்த விஷயத்தை பற்றிய அவர்களது புரிதல் மிகவும் சிறப்பாகிறது. அதனால், 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்றல் என்பது பெரிதும் உதவும். 

எனினும், சில கல்வியாளர்கள் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் மொழிக்கொள்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், வேலை இடமாற்றம் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டிய பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், அதிமுக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

தேசிய கல்விக்கொள்கையில் முக்கியம்சமாக மூன்று அல்லது நான்கு ஆண்டு இளங்கலை படிப்புகள், பட்டப்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பின்னர் தொடரலாம் என்றும், எம்.பில் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.