This Article is From May 02, 2019

175 கி.மீ. வேகத்தில் ஒடிசாவை தாக்கும் ஃபனி புயல்! 89 ரயில்கள் ரத்து!! - அறிய வேண்டிய 10 தகவல்கள்

ஒடிசா மாநிலத்திற்கு பலத்த சேதத்தை ஃபனி புயல் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

175 கி.மீ. வேகத்தில் ஒடிசாவை தாக்கும் ஃபனி புயல்! 89 ரயில்கள் ரத்து!! - அறிய வேண்டிய 10 தகவல்கள்

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தமிழ்நாடு, ஆந்திராவுக்கு ஃபனி புயல் பாதிப்பு ஏற்படலாம்
  • போர்க்கால அடிப்படையில் மக்களை வெளியேற்றும் பணி நடக்கிறது
  • மோடி தலைமையில் அவசர கூட்டம் நடந்துள்ளது.
New Delhi:

ஒடிசாவை 175 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல் தாக்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி 89 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 1999-ல் ஏற்பட்ட புயலை விடவும் இந்த ஃபனி புயல் தீவிரம் மிக்கது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. போர்க்கால அடிப்படையில் மக்களை வெளியேற்றும் பணி ஒடிசாவின் புரி, ஜெகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ராக், பாலசோர், மயுர்பஞ்ச், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக், ஜொஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்து வருகிறது. 

2. 175 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் தெற்கு புரியை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

3. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா அதிரடிப்படை உள்ளிட்டவையும் புயலை எதிர்கொள்ள தயாராகியுள்ளன. 

4. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 28 குழுக்களை ஒடிசாவுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் 30 படைகள் தயார்நிலையில் இருக்கின்றன. 

5. வங்கக் கடலில் புரியில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வந்து கொண்டிருக்கிறது. 

6. முன்னெச்சரிக்கையாக 89 ரயில்களை ரத்து செய்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்தள்ளது. 

7. மே 15-ம்தேதி வரைக்கும் ஒடிசாவில் அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற காவலர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். 

8. தற்காலிகமாக 880 புயல் பாதிப்பு மையங்கள் கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 

9. தமிழகம், ஆந்திராவிலும் ஃபனி சிறிது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஹவ்ரா, ஹூக்ளி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திராவில் ஸ்ரீகைகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினத்திலும் பாதிப்பு ஏற்படலாம். 

10. தாழ்வான பகுதியில் இருப்பவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கை ஒடிசாவில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

.