This Article is From May 29, 2020

லாக்டவுன் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமித்ஷா!

Coronavirus lockdown: மே 31 ஆம் தேதிக்குப் பின்னர் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறும் மாநிலங்களைக் கோரியிருந்தார் அமித்ஷா. 

லாக்டவுன் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமித்ஷா!

Coronavirus lockdown: வரும் ஞாயிற்றுக் கிழமையோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது

New Delhi:

கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட திட்டம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து உள்ளார். நேற்று இவ்விவகாரம் குறித்து அமித்ஷா, மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மே 31 ஆம் தேதிக்குப் பின்னர் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறும் மாநிலங்களைக் கோரியிருந்தார் அமித்ஷா. 

அனைத்து மாநில முதல்வர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக பிரதமர் அலுவலகம், ஜூன் 1 முதல் எப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்திய அளவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எப்படி பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதது என்பது குறித்து அமித்ஷாவும் மோடியும் விவாதித்தனர் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அமித்ஷாவுடனான ஆலோசனையைத் தொடர்ந்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று தகவல் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த காரணத்தினால் பல முறை தனது முடிவை அரசு மாற்றியுள்ளது. 

உள்துறை அமைச்சக வட்டாரம், “இனி ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அரசியல் ரீதியாகத்தான் முடிவெடுக்கப்படும்” என்று கூறுகிறது. 

தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்திற்குக் கீழ் மத்திய அரசு முடிவெடுக்கலாம் எனப்படுகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் மத்திய அரசுதான், சுகாதாரம் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்க முடியும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இறுதி முடிவு எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்கலாம். 

கடந்த மே மாத நடுவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட போது, பல்வேறு விஷயங்களுக்குத் தளர்வு அளித்தது மத்திய அரசு. மேலும், எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கலாம் என்கிற முடிவை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் என்றும் தெரிவித்தது. 

கடந்த முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட போதும், அனைத்து முதல்வர்களுடன் கலந்தாலோசித்தே முடிவெடுத்தார் பிரதமர் மோடி. 


 

.