This Article is From Aug 28, 2018

பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்: தமிழக அரசு

மோட்டார் வாகனச் சட்டப்படி, இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்: தமிழக அரசு

மோட்டார் வாகனச் சட்டப்படி, இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில், ‘இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணிவது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் படி கட்டாயமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 38,491 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 15,601 விபத்துகள் இரு சக்கர வாகனத்தினால் நடந்தவையாகும். விபத்துகளில் 7,526 பேர் இறந்துள்ளனர். அதில், 2,476 பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு சக்கர வாகன விபத்தில் 1,811 பேர் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்பட்டுறள்ளது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் அமர்பவர்கள் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்கிற நடைமுறையை தமிழக காவல் துறை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் எனவும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் எனவும் இருக்கும் சட்டம் ஏன் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இது குறித்து சரியான அறிக்கையை சமர்பிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.