This Article is From May 29, 2019

பெண் மருத்துவர் தற்கொலைக்கு காரணமான 3 சீனியர் மருத்துவர்கள் கைது!

கடந்த புதன்கிழமையன்று மருத்துவர் பாயல் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, மும்பை நாயர் மருத்துவனையில் பணிபுரிந்த மருத்துவர் பாக்டி மேகார் தலைமறைவானார்

பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

New Delhi:

மும்பையில், அரசு மருத்துவமனை விடுதியில், முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், அவருக்கு சாதிய ரீதியாக தொல்லை கொடுத்த மூன்று சீனியர் மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் அம்மாநிலத்தால் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனைக்கு உட்பட்ட கல்லூரியில் தங்கி, பாயல் சல்மான் தாட்வி 26, என்ற பெண் மருத்துவர், பெண்கள் நல மருத்துவத்திற்கான முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதியன்று பாயல் அவரது அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாயலின் தாயார் கூறும்போது, பாயலை அவரது சீனியர்கள் தொடர்ச்சியாக சாதியைக் கூறி அவமானப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர் பாயலை தொடர்ச்சியாக சாதிக்கொடுமைக்கு உட்படுத்தி அவர் தற்கொலை செய்ய காரணமான 3 சீனியர் மருத்துவர்கள் தலைமறைவாகினர். இதனிடையே, மகாராஷ்டிரா மருத்துவர்கள் அசோசியேஷன், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமா ஆகுஜா, பாக்டி மேகார் மற்றும் அங்கிதா காண்டில்வால் ஆகிய மூன்று மருத்துவர்களின் உறுப்பினர் உரிமையையும் ரத்து செய்தது. அவர்கள் 3 பேரும், கல்லூரியில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாயலின் தாயார் கூறும்போது, மூத்த மருத்துவர்களின் சாதிக்கொடுமை குறித்து நிர்வாக தரப்பில் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிர்வாக தரப்பை குற்றம்சாட்டிய அவர், எங்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தவர்கள், ஆனால் அதனை மேற்கொள்ள தவறிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

பாயல் எப்போது என்னிடம் தொலைபேசியில் பேசினாலும், அந்த 3 மூத்த மருத்துவர்களும் தான் பழங்குடியினத்தை சேர்ந்தவள் என்பதால் தன் மீது சாதியக்கொடுமைகள் நிகழ்த்துவதாக கூறுவார். உயிரிழந்த எனது மகளுக்கு நிச்சயம் நீதி வேண்டும் என்று அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த புகார்களை திட்டவட்டமாக மறுத்த நாயர் மருத்துவமனையின் டீன் ரமேஷ் பார்மால், மருத்துவர் பாயலின் தாயார் சாதியக்கொடுமை நடந்ததாக நிர்வாக தரப்பில் புகார் தெரிவித்ததாக கூறுவது உண்மையில்லை என்றும் இந்த விவகாரத்தில் அவர் கூறுவது போன்ற எந்த புகாரையும் இன்றைய நாள்வரை நிர்வாகம் பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குற்றம்ச்சாட்டப்பட்டுள்ள 3 பெண் மருத்துவர்கள் பாயலின் தாயரின் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளளனர். மேலும், இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மருத்துவர்கள் அசோசியேஷனுக்கு கடிதம் அளித்துள்ளனர்.

மேலும், போலீஸ் படைகள் மற்றும் ஊடக அழுத்தம் ஆகியவற்றின் மூலம் எங்களது தரப்பில் எதுவும் கேட்காமல் நடத்துவது விசாரணையல்ல என்று 3 மருத்துவர்களும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாயலின் கணவர் சல்மான் கூறும்போது, அந்த 3 பெண் மருத்துவர்களும் பாயல் கீழ் சாதியை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக தொடர்ந்து அவருக்கு சாதிய ரீதியாக துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர். அவர் சாதியை குறிப்பிட்டு வாட்ஸ் ஆப்பில் தகவல் பரப்பி வந்தனர். அவரை படிக்க விடாமல் கொடுமை செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்றும் காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், பாயலை அந்த 3 மருத்துவர்களும் சேர்ந்து கொலை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

.