ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது சிதம்பரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

New Delhi:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் கைதை தவிர்ப்பதற்காக முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'பொருளாதார குற்ற விவகாரங்களில் மிக அரிதாகத்தான் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கில் உள்ள சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும்போது முன் ஜாமீன் வழங்க தகுதியான வழக்கு இது அல்ல' என்று தெரிவித்துள்ளது. 

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக இதுவரை நடந்தவை - 

1. ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள்.

2. ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு கடந்த 2007-ல் வெளிநாட்டு கம்பெனிகள் மூலமாக சுமார் 305 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகம் என்பதால், இதுகுறித்த விவரங்கள் ஏஜென்சிக்கள் மூலமாக மத்திய அரசுக்கு சென்றுள்ளது.

3. இந்த விவகாரத்தில் கடந்த 2010-ல்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தனர். 

4. வெளிநாட்டு முதலீட்டை 2007-ல் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி கொண்டுவந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

5. இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை நிராகரித்தது. 

6. முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் கடந்த மாதம் 21-ம்தேதி இரவு சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

7. தொடர்ந்து அவரை 15 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் டெல்லி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

8. இன்றைக்கு அமலாக்கத்துறை கைதில் இருந்து பாதுகாக்கக் கோரி அவர் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உண்மை மற்றும் சூழலை கவனத்தில் கொள்ளும்போது ஜாமீன் வழங்க தகுதியுடைய வழக்காக இது இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.