This Article is From Aug 21, 2019

2 மணி நேரத்தில் ஆஜராக எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது? சிபிஐக்கு கேள்வி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: "..இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சட்ட விதிகளை குறிப்பிட உங்கள் (சிபிஐ) அறிவிப்பு தவறிவிட்டது" என்று பி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 மணி நேரத்தில் ஆஜராக எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது?

New Delhi:

எந்த சட்டத்தின் கீழ் 2 மணி நேரத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என சிபிஐக்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்தது சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நள்ளிரவில் 2 மணி நேரத்தில் ஆஜராகும் படி ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸில் எந்த சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் இல்லை, அதனை சிபிஐ தரப்பு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், அவர் இது தொடர்பாக சிபிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில், ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் இன்று காலை அவரச வழக்காக இந்த மனுவினை விசாரிக்க உள்ளது. இதனால், உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கும் வரை காத்திருக்க வேண்டும், அதுவரை ப.சிதம்பரம் மீது எந்த அவசர நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் நீதிபதி சுனில்கவுர் தன்னுடைய தீர்ப்பில் கூறும்போது, இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் அனைத்துக்கும் மனுதாரர் தலைமையேற்று இருக்கிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் முன்ஜாமீன் வழங்குவதற்கான நியாயத்தை எடுத்துக்கூறவில்லை. 

பொருளாதாரம் சார்ந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அணுகவேண்டும். இதுபோன்ற பெரிய அளவிலான பொருளாதார குற்றங்களில் விசாரணை அமைப்புகளின் கரங்களை கட்டிவைக்க முடியாது.

மனுதாரர் முன்னாள் நிதி அமைச்சராக இருந்திருக்கிறார் என்பதையும், அந்நேரத்தில் அவர் ஐஎன்எக்ஸ். மீடியா குழுமத்துக்கு ரூ.305 கோடி அளவில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதால் மட்டுமே அவருடைய முன்ஜாமீன் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்சநீதிமன்றத்தல் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

இதனிடையே, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அப்போது, அவர் வீட்டில் இல்லாததால் திரும்பினர். 

இதைத்தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரம் வீட்டில் இல்லாத நிலையில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

.