கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரமும் தற்போது சிதம்பரம் இருக்கும் அதே சிறை அறையில்தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 2 வார நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டார். திகார் சிறையில் அறை 7-ல் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் குறைவான உணவு உட்கொண்டு தனது நாளை ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சிதம்பரத்தின் கோரிக்கையின் பேரில், தனி சிறை அறை, மேற்கத்திய முறையிலான கழிவறை, உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ள மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
திகாரில் இருக்கும் மற்ற சிறைவாசிகளைப் போல சிதம்பரமும் சிறையின் நூலகத்துக்குச் செல்ல முடியும். அதேபோல குறிப்பிட்ட நேரத்திற்கு டிவி பார்க்க முடியும். நேற்றிரவு சிதம்பரம் ரொட்டி, டால், சப்ஜி மற்றும் சோறு சாப்பிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்துள்ளது.
நேற்று மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரமும் தற்போது சிதம்பரம் இருக்கும் அதே சிறை அறையில்தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் எப்படியும் திகார் சிறைக்குத்தான் கொண்டுவரப்படுவார் என்பதை உணர்ந்திருந்த திகார் சிறை நிர்வாகம், முன்னதாகவே சிதம்பரத்தின் சிறை அறையை தயார் செய்து வைத்திருந்தார்களாம்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய் கிழமை, சிதம்பரத்தின் சிபிஐ கஸ்டடியை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். நேற்று அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'பொருளாதார குற்ற விவகாரங்களில் மிக அரிதாகத்தான் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கில் உள்ள சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும்போது முன் ஜாமீன் வழங்க தகுதியான வழக்கு இது அல்ல' என்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழகில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.