This Article is From Jun 01, 2020

துணை ராணுவப் படை கேன்டீன்களிலிருந்து 1,000-க்கும் அதிகமான ‘சுதேசி அல்லாத’ பொருட்கள் நீக்கம்!

ஸ்கெச்சர்ஸ், ஃபெரேரோ, ரெட் புல், விக்டரிநாக்ஸ், சாஃபிலோ உள்ளிட்ட பிராண்டுகளின் பொருட்கள் இனி கேன்டீன்களில் கிடைக்கப் பெறாது. 

துணை ராணுவப் படை கேன்டீன்களிலிருந்து 1,000-க்கும் அதிகமான ‘சுதேசி அல்லாத’ பொருட்கள் நீக்கம்!

இது குறித்தான அறிவிப்பை மத்திய அரசு முன்னர் அறிவிக்கும்போது, ‘ஜூன் 1 முதல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் மட்டுமே துணை ராணுவப் படை கேன்டீன்களில் விற்கப்படும்’ எனத் தெரிவித்தது. 

ஹைலைட்ஸ்

  • துணை ராணுவ கேன்டீன்களில் ரூ.2800 கோடிக்கு ஆண்டு விற்பனை உள்ளது
  • சுமார் 70% பேர், கேன்டீன்களில் அடிப்படைப் பொருட்களை வாங்குகிறார்கள்
  • இன்று முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது
New Delhi:

நாடு முழுவதுமுள்ள துணை ராணுவப் படை கேன்டீன்களில் இன்று முதல் இறக்குமதி செய்யப்பட்ட (சுதேசி அல்லாத) பொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. இந்தியாவிலேயே உற்பத்தியாகும் பொருட்கள் மட்டுமே கேன்டீன்களில் கிடைக்கும். உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை மத்திய அரசு முன்னர் அறிவிக்கும்போது, ‘ஜூன் 1 முதல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் மட்டுமே துணை ராணுவப் படை கேன்டீன்களில் விற்கப்படும்' எனத் தெரிவித்தது. 

நியூடெல்லா, கிண்டர் ஜாய்,  டிக் டேக், ஹார்லிக்ஸ் ஓட்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ், டாமி ஹில்ஃபிகர் சட்டைகள், அடிடாஸ் நறுமண ஸ்பிரேக்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்றிலிருந்து துணை ராணுவ கேன்டீன்களில் கிடைக்காது. 

ஸ்கெச்சர்ஸ், ஃபெரேரோ, ரெட் புல், விக்டரிநாக்ஸ், சாஃபிலோ உள்ளிட்ட பிராண்டுகளின் பொருட்கள் இனி கேன்டீன்களில் கிடைக்கப் பெறாது. 

துணை ராணுவப் படைகளின் கேன்டீன்களை கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்த்ராஸ் என்னும் அமைப்புதான் நிர்வகிக்கிறது. அது, கேன்டீன் பொருட்களை 3 வகைகளில் பிரித்துள்ளன. 

முதல் பிரிவில், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் மட்டும் இருக்கும். இரண்டாவது பிரிவில் வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பொருட்கள் இருக்கும். மூன்றாவது பிரிவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இருக்கும். 

கொரோனா வைரஸால் இந்தியப் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்ய கடந்த மாதம் பிரதமர் மோடி, ‘ஆத்ம நிர்பார் பாரத்' என்னும் பெயரில் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை அறிவித்தார். இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதை இந்தத் திட்டத்தின் மூலம் வலியுறுத்தினார் பிரதமர். அந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை அடுத்துதான், துணை ராணுவப் படை கேன்டீன்களில், இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமை தரும் முடிவு எடுக்கப்பட்டது. 

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர், “இந்த கேன்டீன்களில் பொருட்கள் வாங்கும் சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர், அத்தியாவசிய மற்றும் அடிப்படைப் பொருட்களைத்தான் வாங்குகிறார்கள். தற்போதைய அரசின் முடிவு மீதமுள்ள 30 முதல் 40 சதவீதம் பேரை பாதிக்கலாம். இறக்குமதி செய்யப்பட்ட பல பிராண்டுகள் இனி இல்லை என்பதால், அரசு அதை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார். 

துணை ராணுவப் படை கேன்டீன்களில் ஆண்டுக்கு சுமார் 2,800 கோடி ரூபாய்க்குப் பொருட்கள் விற்பனையாகின்றன. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய நிறுவன பாதுகாப்புப் படை, இந்திய திபத்திய எல்லைப் படை, எஸ்எஸ்பி, அசாம் ரைஃபல் படை, என்எஸ்ஜி உள்ளிட்டவைகள் துணை ராணுவப் படைகளில் அடங்கும். 

.