This Article is From Jun 24, 2020

ரஷ்யாவில் நடந்த பேரணியில் வீர நடைபோட்ட இந்திய ராணுவம்!

கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறப்பு விமானம் மூலம் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வெளிநாட்டுக்கு செல்லும் முதல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் நடந்த பேரணியில் வீர நடைபோட்ட இந்திய ராணுவம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு விருந்தினர்கள் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.

ஹைலைட்ஸ்

  • இரண்டாம் உலகப்போர் வெற்றியின் நினைவாக ரஷ்யாவில் பிரமாண்ட பேரணி
  • முப்படைகளை சேர்ந்த 75 வீரர்கள் பேரணியில் பங்கேற்றனர்
  • விழாவின் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
New Delhi:

இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி பேரணியில் இந்திய ராணுவத்தினர் கலந்து கொண்டு வீர நடைபோட்டனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

உலகையே திணறடித்த இரண்டாம் உலகப்போர் 1945 –ல் முடிவு பெற்றது. இதில் ரஷ்யா வெற்றி பெற்றதையொட்டி ஆண்டுதோறும் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பால் இந்த விழா இந்தாண்டு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி நிகழ்ச்சியை ரஷ்யா இன்று நடத்திக் காட்டியது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அவருடன் முப்படைகளை சேர்ந்த 75 வீரர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் வீர நடைபோட்டுச் சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஷ்யாவின் வெற்றி தின பேரணி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் நான் பங்கேற்றேன். 1941 – 1945 ல் நடைபெற்ற இந்த போரின் நினைவாக விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டது எனக்கு பெருமை அளிப்பதாக இருக்கிறது' என்று கூறினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு விருந்தினர்கள் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். முகக் கவசமும் அவர்கள் அணிந்திருந்தார்கள்.

ஆண்டுதோறும் ரஷ்யாவின் வெற்றி விழா மே 9-ம்தேதி நடைபெறும். ஆனால் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் விழா ஜூன் 24-ம்தேதியான இன்று கொண்டாடப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்ய வீரர்கள் ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியை பாதுகாத்தது, ஐரோப்பாவை விடுவித்தது, பெர்லினை கைப்பற்றியது உள்ளிட்ட வீர தீர செயல்களை செய்தனர்.

கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறப்பு விமானம் மூலம் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வெளிநாட்டுக்கு செல்லும் முதல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

.