This Article is From Jan 17, 2019

மும்பை: நடன பார்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

2016-ம் ஆண்டின்போது ஏற்படுத்தப்பட்ட சட்டமானது, நடன பார்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இவற்றை உச்ச நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது.

நடன பார்களில் ஆடும் பெண்களின் மீது பணத்தை வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள நீதிமன்றம் அவற்றை மாநில அரசு முறைப்படுத்த வேண்டுமே தவிர, அவற்றுக்கு தடை ஏதும் விதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிர அரசும் வரவேற்றுள்ளது. 

உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவோருக்கு, நடன பார்கள் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு மகாராஷ்டிர அரசால் முக்கிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பான 10 முக்கிய தகவல்கள்

1. வழிபாட்டுத் தலங்களுக்கு 1 கி.மீ. தூரத்திற்குள்ளாக நடன பார்கள் இருக்க தடை விதித்து மகாராஷ்டிர அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனை ஒரு காரணமாக ஏற்க முடியாது என்று கூறி, அந்த பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

2. நடன பார்களில் ஆடுவோருக்கு ஊதியம் வழங்கலாம். அவற்றை பணமாக வீசுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

3. நடன பார்களை மாலை 6 மணிக்கு திறந்து இரவு 11.30 வரைக்கும் வைத்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

4. முன்பு பார் அறைகளும், டான்ஸ் ஆடும் இடங்களும் தனித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. 

5. சிசிடிவி கட்டாயம் என்பதையும் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இது அந்தரங்கத்தில் தலையிடும் விஷயம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

6. டான்ஸ் பாரின் உரிமையாளர் நல்ல குணம் உடையவராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள உச்ச நீதிமன்றம் நல்ல குணம் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை என்று கூறி கட்டுப்பாடை நீக்கியுள்ளது. 

7. 2005-ம் ஆண்டில் இருந்து டான்ஸ் பார்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்ட நீதிமன்றம் பார்கள் நடத்துவதை முறைப்படுத்தலாமே தவிர, அவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. 

8. பெரிய நகரங்களில் வழிப்பாட்டுத் தலங்களில் இருந்து 1கிலோ மீட்டர் தாண்டி நடன பார்களை அமைப்பது சாத்தியம் இல்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

9. நடன பார்களில் ஆடும் பெண்களை பாதுகாப்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறோம். மற்றபடி உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம் என்று மகாராஷ்டிர அரசு தரப்பில் கருத்து கூறப்பட்டுள்ளது. 

10. 2016-ம் ஆண்டு டான்ஸ் பார் முறைப்படுத்துதல் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் விதித்த கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் தற்போது தளர்த்தியிருக்கிறது. 

.