This Article is From May 31, 2020

உ.பியில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிஸ்கெட்டுகளை வீசி எறியும் ரயில்வே அதிகாரி!

தொழிலாளர்கள் அருகில் வந்து வாங்க முயலும்போது அதிகாரிகள் அவர்களை திட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ரயில் நிலையத்தின் தலைமை ஆய்வாளர் டி.கே. தீட்சித் இந்த அதிகாரிகளை வழிநடத்துவதை காண முடிகிறது.

பிஸ்கெட்டுகளை வீசியெறியும் ரயில்வே அதிகாரி ஒருவர்

Lucknow:

நாடு முழுவதும் 1.82 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு முழு முடக்க நடவடிக்கையை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறான ஒரு பயணத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில்  ஃபிரோசாபாத், டண்ட்லா ரயில் நிலையத்தில் நின்றிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் உள்ள தொழிலாளர்களுக்கு அந்த ரயில் நிலைய அதிகாரி ஒருவர் பிஸ்கெட்டுகளை வீசி எறிவது வீடியோவாக வெளிவந்து வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீடியோவில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள டண்ட்லா ரயில் நிலையத்தில் நின்றுள்ள ஷ்ராமிக் ரயிலில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அந்த ரயில் நிலைய அதிகாரி ஒருவர் பிஸ்கெட்டுகளை வீசி எறிவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று ரயில்வே அதிகாரிகள் பலர் செய்கின்றனர். தொழிலாளர்கள் அருகில் வந்து வாங்க முயலும்போது அதிகாரிகள் அவர்களை திட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ரயில் நிலையத்தின் தலைமை ஆய்வாளர் டி.கே. தீட்சித் இந்த அதிகாரிகளை வழிநடத்துவதை காண முடிகிறது.

பிஸ்கெட் வீசியெறிந்த அதிகாரி ஒருவர், “இன்று டி.கே. தீட்சித்தின் பிறந்தநாள் ஆகவே பிஸ்கெட் வழங்கப்படுகிறது“ என கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பயணிகள் மேலும் பிஸ்கெட் சிலவற்றை கேட்கும்போது, “கொடுக்கப்பட்டுள்ள ஒன்றையே பகிர்ந்து சாப்பிடுங்கள்“ என ஒரு அதிகாரி கூறுகிறார்.

சர்ச்சைக்குள்ளான இந்த வீடியோ முதலில் உள்ளூர் ரயில்வே அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

பொதுவெளியில் வைரலான இந்த வீடியோ காரணமாக, இதில் உள்ள தலைமை ஆய்வாளர் டி.கே. தீட்சித் மீது பணி இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதர அதிகாரிகள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என ரயில்வேதுறை ட்விட் செய்துள்ளது.

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்கள் வேலை இழப்பினாலும், வருவாய் இல்லாததாலும், பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டபோதும் பலர் இதனால் பயனடையாமல் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெறும் கால்களுடன் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடக்கத்தொடங்கினர். முழு முடக்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 60 நாட்களுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு புலம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை இலவசமாக அரசுகள் செய்து தர வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இதே போல புலம் பெயர் தொழிலாளர்கள் டெல்லியில் குடிநீருக்காக அவதிப்படும் சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.