This Article is From Aug 05, 2019

“மோசமான விளைவுகள் ஏற்படும்!”- பிரிவு 370 ரத்துக்கு பதைபதைக்கும் மாஜி முதல்வர் ஒமர் அப்துல்லா!

“இந்திய அரசு இன்று எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது"

“மோசமான விளைவுகள் ஏற்படும்!”- பிரிவு 370 ரத்துக்கு பதைபதைக்கும் மாஜி முதல்வர் ஒமர் அப்துல்லா!

"இந்த முடிவு எதிர்பார்க்க முடியாத மிகவும் ஆபத்தான விளைவுகளைக் கொடுக்கும்"

Srinagar:

மத்திய அரசு, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, “மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது” என்று பொங்கியுள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது என்றும் அது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது என்றும் அமித்ஷா கூறினார். 

நேற்று இரவு முதல் காஷ்மீரில் இருக்கும் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் அம்மாநில முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லாவும் அடங்குவார். 

“இந்திய அரசு இன்று எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. அந்த நம்பிக்கையினால்தான் 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த முடிவு எதிர்பார்க்க முடியாத மிகவும் ஆபத்தான விளைவுகளைக் கொடுக்கும். இது மாநில மக்களுக்கு எதிரான வன்முறையே ஆகும்” என்று கறாரான முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அப்துல்லா. 
 

கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். காஷ்மீரில் இணைய சேவை மற்றும் போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. ஜம்மூ காஷ்மீரின் இன்னொரு முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முப்டி, “இந்திய ஜனநாயகத்தின் மிக மோசமான நாள் இன்று” கருத்து தெரிவித்துள்ளார். 

.